Friday, 4 November 2011

நீ என்ன பெரிய்ய பருப்பா.. ??

அக்காலத்தில் மெத்த படித்தவர்களையும், மேன்மையான பொறுப்புகளில் இருப்பவர்களையும் பண்டிதர் என்று அழைப்பது வழக்கம். அந்த ஊரில் வசித்து வந்த பொன் பொருளுடைய சீமான் ஒருவருக்கு தன்னையும் எல்லோரும் பண்டிதர் என்று அழைக்கவேண்டும் என்ற ஆசை. ஆனால் அவர் படிக்காதவர், அதனால் எந்தவித பெரிய பொறுப்புள்ள பதவிகளிலும் அமர வாய்ப்பு இல்லாதவாரக இருந்தார். ஆனாலும் அவரின் பண்டிதர் ஆசை விடவில்லை.

ஒருநாள் இவர் பீர்பாலிடம் கேட்டார்," எல்லோரும் உங்களை பண்டிதர் என்று அழைக்கிறார்கள், உங்களைவிட செல்வந்தனான என்னை யாரும் அப்படி அழைப்பதில்லை.. நானும் பண்டிதர் என எல்லோராலும் அழைக்கப்படவேண்டும்; அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

இவருக்கு பண்டிதர் என்பதன் பொருள் சொல்லி தெளிய  வைக்க முடியாது என்று புரிந்து கொண்ட பீர்பால் அவரை வேறு விதமாக கை ஆண்டார்.
அவரிடம் பீர்பால்," சரி, நாளை முதல் உங்களை எல்லோரும் பண்டிதர் என கூப்பிட நான் ஏற்பாடு செய்கிறேன், ஆனால் நாளை ஒருநாள் மட்டும் உங்களை பண்டிதர் என்று யாரேனும் கூப்பிட்டால் நீங்கள் கோபப்பட வேண்டும்" என்று கட்டளை இட்டு அனுப்பி வைத்தார்.

பின்பு அருகில் விளையாடி கொண்டிருத்த சிறுவர்களை அழைத்து, இப்படி சொன்னார்,"சிறுவர்களே, அதோ போகின்றாரே.. அந்த செல்வந்தரை மட்டும் யாரும் பண்டிதர் என அழைத்து விடவேண்டாம், அப்புறம் அவ்வளவு தான், அவருக்கு கடும் கோபம் வந்து விடும்.. மறுபடியும் கூறுகிறேன் யாரும் அவரை பண்டிதர் என அழைக்கக் கூடாது"

செல்வந்தர் செல்வதையே உற்றுப்பாந்த்துக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன்," பண்டிதரே!! ஏய்  பண்டிதரே!! " எனக் கத்திவிட்டு ஒளிந்து கொண்டான். கடும் கோபமான தோரணையில் அவர்களை திரும்பிப் பார்த்த செல்வந்தர்," யாரடா என்னை பண்டிதர் என அழைத்தது?? யாரவது அப்படி கூப்பிட்டால் நடப்பதே வேறு" என்று கோபித்துவிட்டு நடையைக் கட்டினார்.

சிறுவர்களும் விளையாட்டாக பண்டிதர் பண்டிதர் என்று மறுநாள் முழுவதும் கேலி செய்வதும், செல்வந்தர் கோபப்படுவதும் - என்று முழு நாள் வேடிக்கை பார்த்த மக்கள் அவர்களும் பண்டிதர் என்றே அழைக்கத்தொடங்கினர். இப்போது செல்வந்தர் எதிர்ப்பார்த்தப் படி ஊரே அவரை பண்டிதர் என அழைத்துக்கொண்டிருந்தது. 

ஆனால் இந்த அர்த்தத்தில் தான் எல்லோரும் தன்னை அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரா அந்த செல்வந்தர் ?

ஒரு சொல்லில்லோ அல்லது பெயரிலோ மட்டும் அதன் அர்த்தம் அடங்கிவிடுவதில்லை, வெறும் அகராதியில் இருக்கும் அர்த்தம் மட்டும் ஒரு சொல்லுக்கு மதிப்பு சேர்த்துவிடாது. அந்த சொல்லை மக்கள் தங்களுக்குள் எப்படி கையாளுகின்றனர், பொதுவாழ்வில் அந்த சொல் அல்லது பெயருக்கு மக்கள் மத்தியில் உள்ள மதிப்பு என்ன என்பதே அவசியம். இல்லாவிட்டால் செல்வந்தர், பண்டிதர் ஆனா கதை போல் ஆகிவிடும்.

தமிழை வளர்ப்பவர்கள், ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படகிறார்கள்.. ஆனால் அவர்கள் உழைப்பு பலன் பெறுகிறதா என்றால் சுத்தமாக இல்லை. மக்கள் எதனை கொண்டாடுகிறார்களோ அதுவே நிலைத்து நிற்கும்.

இன்று அப்பாடாக்கர், அகாதுகா, டுபாக்கூர் - இவற்றைக் கூட சிறிதும் கூச்சம்இன்றி பொது இடங்களில் பேசும் நாம், தூயத்  தமிழை பேச மலைக்கின்றோம்.  

புதிது புதிதாக தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டாம், தூயத் தமிழை உபயோகப்படுத்தக் கூட வேண்டாம். ஆனால்  நாம் அறிந்தோ அறியாமலோ நம் மொழிக்கு வேறொரு தீங்கை  இழைத்துக் கொண்டிருக்கிறோம்.
பண்டிதர் பொருள் மலிய செய்ததை போல், நம்மால் இன்று பல பெயர்கள், சொற்கள்  - தவறான அர்த்தம் கற்ப்பிக்கப்பட்டு பொதுவிடங்களில் பேசக் கூடாத  கெட்ட வார்த்தைகளாக மாறி போக செய்து கொண்டிருக்கிறோம்.

இப்படி சிக்கி சின்னபின்னமான ஒரு சொல்  "பருப்பு".

இன்று சினிமாவில் யாரேனும் உபயோகித்தால் கூட MUTE செய்து விடுகின்ற அளவிற்கு மிகவும் மட்டமான வார்த்தையாக மாறிவிட்டது. ( இப்படி மாற்றியதே சினிமா தான் என்று நினைக்கிறேன் ) ஆனால் யோசித்துப்பார்த்தால் சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த சொல்லுக்கான  அர்த்தம் இப்படி இல்லை என்றே நினைக்கிறேன், குறுகிய காலத்தில் கெட்ட வார்த்தையாகிவிட்ட ஒரு சொல்.

சில நாள் முன் சென்னையில் ஒரு ஹோட்டல் சர்வர், பருப்பு என்பதற்கு பதில் டால் என்றது ஹிந்தியில் சொன்னார். அவரிடம், " ஏன் எல்லாத்தையும் தமிழ்ல சொல்றீங்க.. பருப்புன்னு தமிழ்ல சொல்ல வேண்டியதுதான " என கேட்டதற்கு சின்னதாக சிரித்துவிட்டு போனார். பருப்பு என்று சொல்ல கூச்சப்பட்டது சிரிப்பில் தெரிந்தது.

நாம் புதிதாக தமிழ் சொல்லை கண்டுபிடித்து, வழக்கத்தில் புகுத்தி பல வருடங்கள் இருக்கும், ஆனால் ஏற்கனவே வழக்கத்தில் உள்ள சொற்களை மதிப்பு குறைக்க செய்தது பல. சர்க்கரை என்றால் திருநெல்வேலி பக்கம் கேட்ட வார்த்தையாம் ??? எப்படி இருக்கிறது .
இப்படி நாம் நமக்குள்ளேயே வழக்கமான வார்த்தைகளின் மதிப்புகளை தரம் குறைய செய்ததன் உச்சம், சில ஆண்டுகளுக்கு முன் அரசே புதிதாக மாற்று வார்த்தைகளை அறிமுகம் செய்ததது.

உடல் ஊனமுற்றோரை - மாற்று திறனாளிகள் என்றும், அலிகளை - அரவாணிகள் என்றும் தற்போது திருநங்கைகள் என்றும் - புதிய வார்த்தைகள் அறியப்பட்டு வருகின்றன.

உடல் ஊனமுற்றோர்களும், அரவாணிகளும் இந்த புதிய வார்த்தைகளால், தன்னம்பிக்கை பெற்றுள்ளனர் என்பது மிக்க மிக்க மகிழ்ச்சியே !!
ஆனால் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு நிகரான உரிமையும், மதிப்பும் எதிர்பார்க்கும் இவர்களுக்கு - புதிய வார்த்தைகள் தான் நிரந்தர தீர்வா ??

மாற்றுதிறனாளிகள் , திருநங்கைகள் - இந்த வார்த்தைகளும் காலப் போக்கில் " பருப்பு " போல் மாறிவிட்டால் ?? அதற்குப்பின் வேறொரு வார்த்தை கண்டுபிடிப்போமா நாம் ??

புதிய சொற்கள் அறிமுகப்படுத்தியது, ஏதோ பழைய சொற்கள் மலிந்த பொருள்  கொண்டதுப் போல் செய்துவிட்டதை போன்ற ஒரு உணர்வு.
சில நாட்கள் முன் RAA - ONE படத்தில் பாடல் வெளியீடு விழா என்று நினைக்கிறேன், சாருக்கான் DUFF AND DUMB என்று உபயோகப்படுத்தியதற்கு ஒரு பெண் உணர்ச்சிவசப்பட்டு பேசினார் என செய்தி படித்தேன்.

அவருக்கு ஷாருக்கான் பதில் அளிக்கையில், "தான் ஒன்றும் தவறாக கூறியதாக நினைக்கவில்லை, DUFF AND DUMB ஐ, பின்பு எப்படி சொல்வது ?" - என்றதற்கு, அந்த பெண் " MUTE " என்று பயன் படுத்தலாமே என கூறினாராம். இது பகுத்தறிவா ?? விதண்டாவாதமா ?? அறியாமையா ?

உண்மையில் ஷாருக் கான் மேல் தவறா ?? 

கூன், குருடு என்று அவ்வை பாட்டியே இந்த வார்த்தைகளை பயன்ப்படுத்த வில்லையா?? கண் தெரியாதவரை குருடன் என்றும், காரது கேளாதவரை செவிடன், பேச முடியாதவரை ஊமை - என்றும் அறிவதில் என்ன தவறு?? அப்படிப்பட்டவர்களை அவர்களின் இயற்பெயர் சொல்லி கூப்பிடாமல், புனைப்பெயராக அழைப்பதுதான் தவறு.

வார்த்தைகளின் தரம் தாழ்த்தி உபயோகப்படுத்துவது நம் தவறு, புதிய சொற்களை தேடாமல் உள்ள அர்த்தத்தை உள்ளபடியே கையாண்டு , பொருளை கெடுக்காமல் இருந்தாலே போதும். இலவசத்திற்கு - விலையில்லா என்று மாற்று வார்த்தை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்காது.

இப்படியே போனால், இருக்கும் காய்கறிகள், பழங்கள் - இரட்டை அர்த்தம் கற்ப்பிக்கப்பட்டு உண்மையான அர்த்தம் காணாமல் போய்விடும்.

நாற்றம் - வாசனை  என்று பொருள்
துர்நாற்றம் - கெட்ட வாசனை  

நன்றி. (தற்போது வரை நன்றி நல்ல வார்த்தை என்றே நினைக்கிறேன்)








No comments:

Post a Comment